3798. பெருந்தண்மா மலர்மிசை யயனவ
       னனையவர் பேணுகல்வித்
திருந்துமா மறையவர் திருநெல்வேலி
     யுறை செல்வர்தம்மைப்
பொருந்துநீர்த் தடமல்கு புகலியுண்
     ஞானசம் பந்தன்சொன்ன
அருந்தமிழ் மாலைகள் பாடியாடக்
     கெடு மருவினையே.                  11

    11. பொ-ரை: பெரிய, குளிர்ந்த, சிறந்த தாமரைப்பூவில்
வீற்றிருக்கும் பிரமனைப் போன்றவர்களான தாம் விரும்பும்
கல்வியினால் மனம் பண்பட்ட, சிறந்த வேதங்களை உணர்ந்த
அந்தணர்களை உடைய திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும்
அருட்செல்வரான சிவபெருமானைப் போற்றி, பொருந்திய நீர்
நிலைகள் நிரம்பிய சீகாழி ஞானசம்பந்தன் பாடிய பாமாலைகளைப்
பாடிப் பரவசத்துடன் ஆட, போக்க முடியாத வினைகளெல்லாம்
அழிந்து போகும்.

     கு-ரை: பேணு - பாராட்டத்தக்க, கல்வித்திருந்தும் -
கல்வியால் நிரம்பிய மறையவர், அதனால் அயனையனையவர் பாடி,
ஆட திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் முத்தமிழ்விரகர்
ஆகையால் அவர் தமிழ்ப் பாடல்கள் இயற்றமிழ்ப் பாடல்களேயன்றிப் பாடுதற்குரிய இசைப் பாடல்களாகவும் ஆடுதற்குரிய பாடல்களாகவும் உள்ளன என்பது இங்குக் குறித்தவாறு.