3881. அலைவளர் தண்புனல் வார்சடைமே
       லடக்கி யொருபாகம்
மலைவளர் காதலி பாடவாடி
     மயக்கா வருமாட்சி
இலைவளர் தாழை முகிழ்விரியு
     மிராமேச் சுரமேயார்
தலைவளர் கோலநன் மாலைசூடுந்
     தலைவர் செயுஞ்செயலே.               3

     3.பொ-ரை:தழைகளை உடைய தாழை மரங்கள் மலர்களை
விரிக்கும் திருராமேச்சுரத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற. அழகிய
தலைமாலைகளைச் சூடிய, தலைவராகிய சிவபெருமான் தமது நீண்ட
சடைமுடிமேல் அலைபெருகிவரும் கங்கைநீரை அடக்கி, ஒரு
பாகமாக அமைந்த மலையிலே வளர்ந்த உமாதேவி பாட, நடனமாடித் தம் தன்மை இதுவென்றுபிறர் அறியாதவாறு செய்து வரும்
அருஞ்செயலின் மாட்சியை மெய்ஞ்ஞானிகளே உணர்வர்.

     கு-ரை:அலைவளர் தண்புனல் - அலை பெருகி வந்த கங்கை
நீரை, வார் - தொங்கும், சடைமேலடங்கச் செய்து. ஒரு
பாகத்திலுள்ள(தனது காதலி, பாட, ஆடி மயக்க - (தன் தன்மை
இதுவென்று) அறியாவாறு செய்து வரும் மாட்சி. ஏனை மரங்களிற்
கோலக் கோடு, கவடு, வளார் இன்றித் தழையே யுண்மையால் இம்
மரம் தாழையென்னப் பட்டதெனப் பகுதிப் பொருள் கூறுவார்
போன்று எமது புகலியர் பெருமான் இலை வளர் தாழை யென்றது
போற்றத் தக்கது. ‘தலைவளர் சூடும்’ மிக்க தலைகளைக் கோத்த
அழகிய நல்ல மாலையைச் சூடும் தலைவர்; தலைமாலை தலைக்
கணிந்த தலைவன்.