3961. வேட்டு வேள்விசெ யும்பொரு ளைவிளி
  மூட்டு சிந்தை முருட்டமண் குண்டரை
ஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே
காட்டி லானை யுரித்தவெங் கள்வனே
     ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
     ஆல வாயி லுறையுமெம் மாதியே.        6

     6. பொ-ரை: காட்டில் வாழும் யானையின் தோலை உரித்துப்
போர்த்த என் உள்ளங் கவர்ந்த கள்வரே! அந்தணர்கள் விரும்பிச்
செய்கின்ற வேள்விச் செயல்களை இகழ்ந்து பேசும்
வன்னெஞ்சினராகிய அமண்குண்டர்களை அடியேன் வாது செய்து
விரட்ட உமது திருவுள்ளம் யாது? அழகிய ஆலவாயில்
வீற்றிருந்தருளும் எம் ஆதி மூர்த்தியே! உலகனைத்தும் உம் புகழே
மிக வேண்டும். திருவருள் புரிவீராக!

     கு-ரை: வேட்டு - விரும்பி. பொருளை - காரியத்தை.
விளிமூட்டு - இகழ்ச்சி செய்கின்ற. விளி இப்பெருாளாதலை
”கூற்றத்தைக் கையால் விளித்தற்று” என்ற திருக்குறளிற் காண்க.
முருடு அமண் - வன்னெஞ்சை உடைய அமணர். முருடு - இலேசில் பிளக்க முடியாத கட்டை. “வன்பராய் முருடு ஒக்கும் என் சிந்தை”
என்பது திருவாசகம். முருடு இங்குப் பண்பாகுபெயர். ஓட்டி வாது
செய - வாது செய்து ஓட்ட என வினையெச்ச விகுதி மாறிக் கூட்டுக.
காட்டிலானை - காட்டில் வாழும் யானை. வனசரம். ஏனைய கிரிசரம், நதிசரம் என்பன.