4034. |
கந்தமார்பொழில்
சூழ்தரு கம்பமே |
|
காதல்செய்பவர்
தீர்த்திடு கம்பமே
புந்திசெய்வது விரும்பிப் புகலியே
பூசுரன்றன் விரும்பிப் புகலியே
அந்தமில்பொரு ளாயின கொண்டுமே
யண்ணலின்பொரு ளாயின கொண்டுமே
பந்தனின்னியல் பாடிய பத்துமே
பாடவல்லவ ராயின பத்துமே. 11 |
11.
பொ-ரை: நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்து
விளங்குவது திருவேகம்பம் என்னும் திருத்தலம். அதனை விரும்பி
வழிபடுபவர்கள் பழவினையால் வரும் துன்பங்கட்கு வருந்திச் சொரியும் துன்பக் கண்ணீரைத்
தீர்த்திடும். எல்லாம் சிவன் செயல்
என்பதை நிச்சயித்து, புகலியில் அவதரித்த பூசுரனான திருஞான
சம்பந்தன், அந்தமில் பொருளாந்தன்மையை உட்கொண்டு,
சிவபெருமானின் புகழையே பொருளாகக் கொண்டு அருளிய
இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள் பக்தியில் மேம்பட்டு எல்லாம்
கைகூடப்பெறுவர்.
கு-ரை:
கம்பமே - திரு ஏகம்பத்தையே. காதல் செய்பவர் -
விரும்புபவர்கள். தீர்ந்திடு(தல்) உகு அம்பம் - (வருந்திச்) சொரிகின்ற
துக்கக் கண்ணீர், தீர்த்திடுதல் முதனிலைத் தொழிற்பெயர். அம்பம் -
அம் சாரியை, அம்பு - தண்ணீர். புந்தி செய்து - எல்லாம் சிவன்
செயலாகப் பாவித்து. விரும்பி - விருப்பங்கொண்டு. புகலியே -
சீகாழியையே இருப்பிடமாகக் கொண்ட. பூசுரன்தன் -
சம்பந்தப்பெருமானின், விரும்பிப் புகலியே - விரும்பிச் சரண்புக்க,
இடமானவன். அந்தமில் பொருள் ஆயின கொண்டு - அழிவிலாப்
பொருளாந்தன்மையை உட்கொண்டு. அண்ணலின் - சிவபெருமானின், பொருளாயின கொண்டு -
புகழை விஷயமாகக் கொண்டு பாடிய
பத்தும் வல்லவர்க்கு. ஆயின - உரிய ஆயின. பத்தும் - பத்தியின்
வகைகளும் - ஆயின என்ற பண்பைப் பயனிலையாற் பத்தியின்
வகைகள் என எழுவாய் கூறப்பட்டது. பத்தியின் வகைகள்
பத்திசெலுத்தும் வகைகள்.
|