4056. மேய செஞ்சடையி னப்பனே
       மிழலைமே வியவெ னப்பனே
ஏயு மாசெய விருப்பனே
     யிசைந்த வாசெய விருப்பனே
காய வர்க்கசம் பந்தனே
     காழி ஞானசம் பந்தனே
வாயுரைத்த தமிழ் பத்துமே
     வல்லவர்க்கு மிவை பத்துமே.           11

    11. பொ-ரை: சிவபெருமான் சிவந்த சடையில் கங்கையை
அணிந்தவர். திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளும் என் அப்பர். முத்தொழிலையும் அவருடைய
சந்நிதியில் அவரவர் செய்ய வாளா இருப்பவர். தம்மைப் போற்றி
வழிபடும் பக்தர்கட்கு விருப்பமானவர். பஞ்ச பூதங்களோடும்
தோய்ந்தும் தோயாமல் இருப்பவர். அப்பெருமானைப் போற்றி,
சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ்த்
திருப்பதிகத்தை ஓத வல்லவர்களுக்கு, இவை ஞானத்தின்
படிநிலைகள் பத்தாய் அமையும். (இறுதியில் சிவபோகம் பெறுவர்
என்பது குறிப்பு).

     கு-ரை: சடையின் அப்பன் - சடையில் தரித்த நீரையுடையவன்.
என்அப்பனே - எந்தையே. ஏயும் ஆ(று) - பொருந்திய விதமாக.
செய - முத்தொழிலையும் உன் சந்நிதியில் அவரவர் செய்ய.
இருப்பனே - வாளா இருப்பவனே! என்பது “மூவண்ணல் தன் சந்நிதி
முத்தொழில் செய்ய வாளா மேவண்ணல்” என்னும் திருவிளையாடற்
புராணத்தில் வருங் கருத்து.

     காயவர்க்கம் - ஆகாயம் முதலிய பஞ்ச பூதங்களோடு -
அசம்பந்தனே (தோய்ந்தும்) தோய்வில்லாமல் இருப்பவனே. வர்க்க +
அசம் பந்தன் - வர்க்க சம்பந்தன் என மருவி வந்தது. காயம் -
முதற்குறை. (காயவர்க்கம் - உடற்கூட்டம். பிறப்பிலான்).