4049. கட்டு கின்றகழ னாகமே
       காய்ந்ததும் மதன னாகமே
இட்ட மாவதிசை பாடலே
     யிசைந்த நூலினமர் பாடலே
கொட்டுவான் முழவம் வாணனே
     குலாயசீர் மிழலை வாணனே
நட்ட மாடுவது சந்தியே
     நானுய்தற் கிரவு சந்தியே.              4

     4. பொ-ரை: சிவபெருமான் திருவடிகளில் வீரக்கழலாக
அணிந்துள்ளது நாகத்தையே. அவர் எரித்தது மன்மதனது
உடம்பையே. அவர் விரும்புவது அடியவர்கள் பாடும் இசைப்
பாடலே. பொருந்திய நூலின் அமைதிக்கு ஏற்றதாயிருப்பது அவர்
ஆடலே. அவ்வாடலுக்கு முழவங் கொட்டுபவன் வாணனே. இவை
திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும்
சிவபெருமானின் சிறப்புக்கள். அவர் நடனமாடுவது சந்தி என்னும்
நாடக உறுப்பின்படி. நான் காம வாதையினின்றும் பிழைப்பதற்கு
இராக்காலம் தக்க சமயமாகும்.

     கு-ரை: கழல் - வீரகண்டை. நாகமே - பாம்பே. (மதனன்)
ஆகம் - உடம்பு. காய்ந்ததும் - எரித்ததும், இட்டமாவது - விருப்பம்
ஆவது, இசை பாடல் - அடியார் இசைபாடக் கேட்டலில், அதனை
“கோழைமிடறாக கவிகோளுமிலவாக இசைகூடும் வகையால்
ஏழையடியாரவர்கள் யாவை சொன, சொன்மகிழும் ஈசன்” எனவும்
“அளப்பில கீதம் சொன்னார்க் கடிகடாம் அருளுமாறே” எனவும்
வரும் திருப்பதிகங்களால் உணர்க. இசைந்த - பொருந்திய, நூலின் -
நூலின் அமைதிக்கு. அமர்பு - ஏற்றதாயிருப்பது. ஆடலே - அவர்
திருக்கூத்தே. பரத சாத்திர முறையே ஆடுகின்றனர் என்ற கருத்து.
அவ்வாடலுக்கு வாணன் முழவங் கொட்டுபவன். மிழலை வாணன் -
அவர் மிழலையில் வாழ்பவர். நட்டம் ஆடுவது - திருக்கூத்தாடுவது,
சந்தி என்னும் நாடக உறுப்பின்படியேயாம். சந்தியாவது நாடக
நூலின்ஒரு சிறந்த பகுதி. அது, நெற்பயிர் வளர்ந்து நிமிர்ந்து,
கருக்கொண்டு,காய்த்து, வளைந்து முடிசாய்வது போன்றது. இது
நூலின் இலக்கணமாயினும் ஆடுதலிலும் நுதலிய பொருளை
அங்ஙனம் அமைத்துக் காட்டுக என்னும் வழியை இங்கே நமது
சம்பந்தப் பெருமான் விளக்கியருளுகிறார். “சந்தியிற்றொடர்ந்து”
என்பது தண்டியலங்காரம் “சந்தியின் வளர்ந்து” என்பர்
திருவாவடுதுறை ஆதீனம் கச்சியப்ப முனிவர். (பேரூர்ப்புராணம்
நாட்டுப்படலம்) நான், உய்தற்கு - காமன் வாதையினின்றும்
பிழைப்பதற்கு. இரவு - இராக் காலம். சந்தி - சந்து செய்விப்பதாகும்.
தலைவிகூற்று.