4081. நிருத்தன்ஆ றங்கன் நீற்றன்நான் மறையன்
       நீலமார் மிடற்றன்நெற் றிக்கண்
ஒருத்தன்மற் றெல்லா வுயிர்கட்கு முயிரா
     யுளனிலன் கேடிலி யுமைகோன்
திருத்தமாய் நாளு மாடுநீர்ப் பொய்கை
     சிறியவ ரறிவினின் மிக்க
விருத்தரை யடிவீழ்ந் திடம்புகும் வீழி
     மிழலையா னெனவினை கெடுமே.        3

     3. பொ-ரை: சிவபெருமான் திருநடனம் செய்பவர். வேதத்தின்
அங்கமாக விளங்குபவர். திருநீறு பூசியுள்ளவர். நால்வேதங்களை
அருளிச் செய்து அவ்வேதங்களின் பொருளாய் விளங்குபவர்.
நீலகண்டத்தர். நெற்றிக் கண்ணுடையவர். ஒப்பற்றவர். எல்லா
உயிர்கட்கும் உயிராய் விளங்குபவர். பதிஞானத்தால் உணர்பவர்க்கு உளராவார். பசு ஞானத்தாலும், பாச ஞானத்தாலும் அறிய
முற்படுபவர்கட்கு இலராவார். உயிர்களின் தீமையைப் போக்குபவர்.
உமாதேவியின் கணவர். புனித தீர்த்தத்தால் நாள்தோறும்
அபிடேபிக்கப்படுபவர். வயதில் சிறியோர் அறிவு சால் சான்றோரின்
திருப்பாதத்தை அட்டாங்க நமஸ்காரமாக வணங்கிப் போற்றச் சீலம்
மிக்கவர்கள் வாழும் திருவீழிமிழலையில் வீற்றிருந்தருளுபவர்.
அவருடைய திருநாமத்தை ஓத வினை நீங்கும்.

     கு-ரை: திருத்தம் - தீர்த்தம்