4096. |
முத்தின்றாழ்
வடமுஞ் சந்தனக் குழம்பு |
|
நீறுந்தன்
மார்பினின் முயங்கப்
பத்தியார் கின்ற பாண்டிமா தேவி
பாங்கொடு பணிசெய நின்ற
சுத்தமார் பளிங்கின் பெருமலை யுடனே
சுடர்மர கதமடுத் தாற்போல்
அத்தனா ருமையோ டின்புறு கின்ற
வாலவா யாவது மிதுவே. 7 |
7.
பொ-ரை: முத்துமாலையும், சந்தனக் குழம்பும், திருநீறும்
தம் மார்பில் விளங்கப் பக்தியோடு பாண்டிமாதேவியாரான
மங்கையர்க்கரசியார் வழிபடுகின்ற, தூய பளிங்குமலை போன்ற
சிவபெருமானும், சுடர்விடு மரகதக் கொடி போன்ற உமாதேவியும்
மகிழ்ந்து வீற்றிருந்தருளும் திரு ஆலவாய் இதுவே.
கு-ரை:
முத்தின் தாழ்வடம் பாண்டியர்க்கே சிறப்பாய் உரியது.
பளிங்கின் பெருமலை - சதாசிவ மூர்த்தியின் திருமேனி பளிங்கு
போன்றது என்ப. (சைவர்களைக் கண்டாலும் தீட்டு, அவர்கள்
கூறுவதைக் கேட்டாலும் தீட்டு என்று சமணர்கள் வாழ்ந்த
காலத்திலே, சமணநெறி ஒழுகிய தம் கணவரான பாண்டிய மன்னர்
மனம் புண்படாதிருக்க மங்கையர்க்கரசியார் திருநீற்றினைத் தம்
மார்பில் பூசிக்கொண்டார். இது அம்மையாரின் மாண்பை
உணர்த்தும்.)
|