2803. நீலத் தார்கரி யமிடற் றார்நல்ல
       நெற்றி மேல்உற்ற கண்ணி னார்பற்று
சூலத் தார்சுட லைப்பொடி நீறணி வார்சடையார்
சீலத் தார்தொழு தேத்துசிற் றம்பலம்
     சேர்த லால்கழற் சேவடி கைதொழக்
கோலத் தாய்அரு ளாய்உன காரணம்கூறுதுமே.   3

     3. பொ-ரை: நீலநிறத்தைப் பொருந்திய கரிய திருக்கழுத்தினர்
(திருநீலகண்டர்). அழகிய நெற்றிக்கண்ணினர். திரிசூலம் பற்றியவர்,
காடுடைய சுடலைப் பொடிபூசியவர், சடையினர், சீலம் மிக்கவர்
ஆகிய தில்லைவாழந்தணர் வணங்கியேத்தும் திருச்சிற்றம்பலத்தை
இடைவிடாது நினைந்து சேர்தலால். திருக்கோலம் உடைய நடராசப்
பெருமானே! நின் கழலணிந்த சேவடியைக் கையால் தொழ அருள்
செய்தாய். உன்னுடைய காரணங்களை (முதன்மையை)க் கூறுவேம்.

     கு-ரை: இத்திருப்பாடல், தில்லைக்குச் செல்லுங்கால்,
திருஞான சம்பந்த சுவாமிகளுக்கு எதிர்வந்து தில்லைவாழந்தணர்கள்
சிவகணநாதர்களாகத் தோற்றம் அளித்த உண்மையை உணர்த்திற்று.
நீலத்து - நீலமணியைப்போல், ஆர் - பொருந்திய, கரிய -
கருமையையுடைய. நீலம், கறுப்பு, பச்சை இவற்றுள் ஒன்றைப் பிறிது
ஒன்றாகக் கூறும் வழக்கு உண்மையை “பச்சைப் பசுங்கொண்டலே”
 (மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ். பா.1) என்று வருவதாலும் அறிக.
மிடற்றார் - கண்டத்தையுடையவர், பற்று சூலத்தார் - கையில் சூலம்
பற்றியவர், சேர்தலால் பற்றுக்கோடாக, நாங்கள் சேர்ந்தமையாலும்,
உன காரணம் கூறுதும் - எல்லாவற்றிற்கும் நீயே காரணனாம்
தன்மைகளைக்கூறுவோம். கோலத்தாய் அருளாய் -
அழகையுடையவனே, உன் சிவந்த திருவடிமலர்களைத்தொழ எமக்கு
அருள்வாயாக. சேவடி(யைத்) தொழ அருளாய் எனக் கூட்டுக.
“அவனருளாலே அவன் தாள்வணங்கி” என்றல் கருத்து. நீலகண்டம்,
முக்கண், சூலம், திருநீற்றுப் பூச்சு, வார்சடை இக்கோலத்தோடும்
தில்லைவாழந்தணரைத் தாம் கண்டமை குறித்தருள்கிறார். இதனைச்
சேக்கிழார் பெருமான் “நீடும் திருத்தில்லை யந்தணர்கள் நீள்
மன்றுள் ஆடும் கழற்கு அணுக்க ராம்பேறு அதிசயிப்பார்” (பெரிய.
திருஞா. பா-168) என்று தொடங்குவது முதலிய பாடல்களில்
குறித்தருள்வது காண்க.