2804. கொம்ப லைத்தழ கெய்திய நுண்ணிடைக்
       கோல வாள்மதி போலமு கத்திரண் டம்ப லைத்தகண் ணாள்முலை மேவிய வார்சடையான்
கம்ப லைத்தெழு காமுறு காளையர்
     காத லால்கழற் சேவடி கைதொழ
அம்பலத்துறை வான்அடி யார்க்கடையாவினையே. 4

     4. பொ-ரை: பூங்கொம்பு தனக்கு இணையாகாவாறு அலையச்
செய்து அதனழகினையும் தான் பெற்ற நுண்ணிய இடையையும்,
அழகும் ஒளியும் உடைய திங்கள் போலும் முகத்தில் இரண்டு
அம்புகளை வருத்தி ஒப்பாகீர் என்றொதுக்கிய திருக்கண்களையும்
உடைய சிவகாமியம்மையார் கொங்கைகளை விரும்பிய
வார்சடையான்,(நடராசாப் பெருமான்), அரகர முழக்கஞ் செய்து
விழுந்தெழுந்து அன்பர்கள் அன்புடன் வழிபடும் காளையைப்போன்ற
உடற்கட்டினர். பேரார்வத்தோடு திருக்கழலணிந்த சிவந்த
திருவடிகளைக் கைகளால் தொழ, பொன்னம்பலத்தில் திருக்
கூத்தாடும் முழுமுதல்வன் அடியவர்க்கு வினைத்தொடர்பு இல்லை.

     கு-ரை: ‘கொம்பு..முலை’ என்றது கங்கையைக் குறித்தலுமாம்,
ஆயினும், அஃது அத்துணைச் சிறப்பினதன்று. காளையர் என்பது
வழிபடுவோருள் அத்தகையாரைக் குறித்ததெனலும் பொருந்தும்.
காளையர்க்கு முன்னும்பின்னும் உள்ள அடைமொழியால் முறையே
பெருமானது திருமேனியிற் கொண்ட ஆர்வமும் திருவடிக்கண் நின்ற
வேட்கையும் விளங்கும்.

     கொம்பு - பூங்கொம்மை. அலைத்து (நமக்கு இத்தகைய
அழகே இல்லையென வருந்த) வருத்தி, அழகு எய்திய -
அழகைப்பெற்ற. நுண்இடை - சிறியஇடை, கோலம் - அழகிய, வாள்,
ஒளி பொருந்திய முகத்து - முகத்தில், அம்பு அலைத்த -
அம்புகளை,(அவ்வாறே) வருத்திய. இரண்டு கண்ணாள் - இரு
விழிகளையுடைய உமாதேவியாரின், வார்சடை - நெடிய சடாபாரம்,
கம்பலைத்து - முக்காரம் செய்து, காமுறு - (கண்டார்) விரும்பும்,
காளையர் - ஏறுபோற் பீடுநடையையுடைய தில்லைவாழ் அந்தணர்
மக்கள், காதலால் - அன்போடு, கழல் சேவடி கை தொழ -
கழலையணிந்த சிவந்த திருவடிகளைத் தொழ. அடையாவினை -
துன்பங்கள் அடையமாட்டா. இறைவனைப் போற்றும் வீறுடைமையால் பெருமித நடைக்குக் காளை உவமம். “ஏறுபோற் பீடு நடை” என்றார் வள்ளுவரும். (திருக்குறள் 59) தில்லைவாழந்தணர்களின், துதித்தல்,
பாடுதல், புகழ் பாராட்டுதல் ஆகிய செயல்களின் ஓசைக்கு, முக்காரம் செய்தல் ஆகிய உவமையும் பெறப்படும். ஏற்றின் ஒலி முக்காரம்
எனப்படும். கம்பலைத்து - கம்பலை யென்னும் பெயரடியாகப் பிறந்த
வினையெச்சம். கம்பலை - ஓசை. “கம்பலை சும்மை, கலியே,
அழுங்கல் என்றிவை நான்கும் அரவப்பொருள” (தொல், சொல், உரி.
53) காதலான்: ஆனுருபு ஒடுப்பொருளில் வந்தது. “தூங்குகையான்
ஓங்குநடைய” என்புழிப்போல. (புறம்.22.)