2805. தொல்லை யார்அமு துண்ணநஞ் சுண்டதோர்
       தூம ணிமிட றாபகு வாயதோர்
பல்லை யார்தலை யிற்பலி ஏற்றுழல் பண்டரங்கா
தில்லை யார்தொழு தேத்துசிற் றம்பலம்
     சேர்த லால்கழற் சேவடி கைதொழ
இல்லை யாம்வினை தான்எரி யம்மதில் எய்தவனே. 5

     5. பொ-ரை: திரிபுரத்தை எரித்தொழிக்க மலையில்லால்
தீக்கணையை எய்தவனே, பழந்தேவர் எல்லாரும் அமுதுண்ண
வேண்டிக் கருணைப் பெருக்கால், நஞ்சினை உண்டதொரு தூய
நீலமணிபோலக் கறுத்த திருக்கழுத்தினனே! பற்கள் நிறைந்த பிளந்த
வாயுடையதொரு தலையில் பலியை ஏற்று உழலும் பாண்டரங்கக்
கூத்தனே! தில்லை வாழந்தணர் வணங்கி ஏத்தும் திருச்சிற்றம்பலத்தைச் சேர்ந்து வழிபடுதலாலும் கழலணிந்த
சேவடியைக் கைகளால் தொழுதலாலும் இருவினையும் பற்றறக்
கழியும்.

     கு-ரை: தொல்லையார் - தொன்மையுடைய தேவர்கள், தூ -
தூய, (கலப்பில்லாத) மணி - நீல ரத்தினம் போன்ற. மிடறா -
கண்டத்தையுடையவனே! பகுவாய் - பிளந்த வாய். தலை -
மண்டையோடு. பண்டரங்கம் - பாண்டரங்கக் கூத்து எனவும், “மதில்
எரிய எய்தவனே” எனவும் (உன்) சேவடி கைதொழ வினை
இல்லையாம் எனவும் கூட்டுக. திரிபுரதகனம் செய்த மகிழ்ச்சியால்
தேரே மேடையாக நின்று சிவபெருமான் ஆடிய கூத்தைப்
‘பாண்டரங்கம்’ என்பர். அது “திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள்
தேரே யரங்கமாக ஆடிய கூத்தே பாண்டரங்கமே” என்பதால் அறிக.