2811. நாறு பூம்பொழில் நண்ணிய காழியுள்
       நான்ம றைவல்ல ஞானசம் பந்தன்
ஊறும் இன்தமி ழால்உயர்ந் தார்உறை தில்லைதன்னுள்
ஏறு தொல்புகழ் ஏந்துசிற் றம்பலத்
     தீச னைஇசை யாற்சொன்ன பத்திவை
கூறு மாறுவல் லார்உயர்ந் தாரொடும் கூடுவரே. 11

     11. பொ-ரை: மணம் நாறும் பூஞ்சோலைகள் பொருந்திய
சீகாழியுள் நான்கு மறைகளிலும் வல்ல திருஞானசம்பந்தர் ஊறும்
இனிய தமிழால் சொன்னவையும், வேதசிவாகமங்களையுணர்ந்த
அந்தணர் மூவாயிரவர் வாழும் தில்லையுள் மேன்மேல் ஏறும்
தொன்மைப்புகழ் தாங்கும் திருச்சிற்றம்பலம் உடையானைப்
பண்ணிசையால் சொன்னவையும் ஆகிய இத்திருப்பதிகத்தை

சையுடன் பாடுமாறு வல்லவர் தேவரொடுங் கூடி இன்பம் அடைவர். (தி.3ப.6பா.11; தி.3ப.31பா.11; தி.3ப.52பா.11.)

     கு-ரை: நாறுபூம்பொழில் நண்ணிய காழி - மணக்கும்
பூக்களையுடைய சோலை பொருந்திய காழியுள் ‘ஞானசம்பந்தன்’
ஊறும் இன் தமிழால் - இனிமை ஊறும் தமிழால், ஏறு தொல் புகழ்
ஏந்து - பழமையான மிக்க புகழைத்தாங்கிய. சிற்றம்பலத்து ஈசனைச்
சொன்ன இவை வல்லார் உயர்ந்தாரொடும் கூடுவர் - உயர்ந்த
சிவனடியாரோடுங் கூடும் பேறு பெறுவர். அடியாரொடு கூடி
வணங்குவோர் உள்ளத்தில் இறைவன் உமாதேவியாரோடும்
எழுந்தருள்வானாதலால் இங்ஙனம் கூறியருளினார். “அடியேன் உன்
அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய்” என்ற
திருவாசகத்தும் காண்க. பூம்பொழில் நண்ணிய காழியுள்
நான்மறைவல்ல ஞானசம்பந்தன் உயர்ந்தார் உறை தில்லையுள், புகழ்
ஏந்து சிற்றம்பலத்து ஈசனை, ஊறும் இன்தமிழால், இசையாற் சொன்ன
இவை பத்து(ம்) கூறுமாறு வல்லார் உயர்ந்தாரொடும் கூடுவர் என்க.
கோயில் முதல் திருப்பதிகத்தின் 8 ஆம் பாடலில் இராவணனையும்
9 ஆம் பாடலில் பிரம விட்டுணுக்களையும் குறிக்கவில்லை.