2822.
|
தேம்பல்
நுண்ணிடை யாள்செழுஞ் சேலன |
|
கண்ணி
யோடண்ணல் சேர்விடம் தேன்அமர்
பூம்பொ ழில்திகழ் பொற்பதி பூந்தராய் போற்றுதும்என்
றோம்பு தன்மையன் முத்தமிழ் நான்மறை
ஞான சம்பந்தன் ஒண்டமிழ் மாலைகொண்
டாம்படி இவை ஏத்தவல் லார்க்குஅடை
யாவினையே. 11 |
11.
பொ-ரை: மெலிந்த சிற்றிடையையும், செழுமையான
சேல்மீன் போன்ற கண்களையும் உடைய உமாதேவியோடு எங்கள்
தலைவனான சிவபெருமான் வீற்றிருக்கும் இடம், தேன் நிறைந்த
பூஞ்சோலைகளுடன் விளங்குகின்ற அழகிய பதியான திருப்பூந்தராய்.
அதனை வணங்குவோம் என்று அத்திருத்தலப் பெருமையைப்
போற்றி வளர்க்கின்ற முத்தமிழ், நான்மறை இரண்டிற்குமுரிய
திருஞானசம்பந்தனின் சிவஞானம் ததும்பும் தமிழ்ப்பாமாலையாகிய
இப்பதிகத்தினைத் தமக்குப் பயன்தர வேண்டி ஓதுபவர்களை
வினைகள் வந்தடையா.
கு-ரை:
தேம்பு நுண்இடை-இளைத்தசிற்றிடை, தேம்பலஞ்
சிற்றிடையீங்கிவள் எனத் திருக்கோவையாரில் வருதலுங்காண்க.
ஓம்புதன்மையன்-அப்பதியின் பெருமையைப் பாதுகாக்கும்
தன்மையையுடையவன். ஒண் தமிழ்மாலை-சிவஞானம் ததும்பும்
தமிழ்ப் பாசுரங்களாலாய மாலையாகிய இப்பதிகம். ஒண்மை-அறிவு;
சிவஞானம், ஆம்படி இவை ஏத்தவல்லார்க்கு அடையாவினையே-
தமக்குப் பயனாகும் வண்ணம் பாசுரங்களாகிய இவற்றைக்கொண்டு
துதிக்கவல்லவர்களுக்கு மேல்வரக் கடவனவும் எஞ்சியனவுமாகிய
வினைகள் அடையமாட்டா. வினை-பால் பகா அஃறிணைப் பெயர்.
|