2826. நிழல்திகழ் மழுவினை யானையின்தோல்
  அழல்திகழ் மேனியில் அணிந்தவனே
கழல்திகழ் சிலம்பொலி அலம்பநல்ல
முழவொடும் அருநடம் முயற்றினனே
     முடிமேல்மதி சூடினை முருகமர் பொழிற்புகலி
     அடியாரவர் ஏத்துற அழகொடும் இருந்தவனே. 4

     4.பொ-ரை: ஒளிவிளங்கும் மழுப்படையை ஏந்தியவனே!
யானையின் தோலை நெருப்புப்போல் விளங்குகின்ற உனது சிவந்த
திருமேனியில் அணிந்தவனே! திருவடியில் விளங்கும் வீரக்
கழல்களும், சிலம்பும் ஒலிக்க, நல்ல முழவு முழங்கத் திருநடனம்
புரிபவனே! சடைமுடியில் பிறைச்சந்திரனைச் சூடியவனே! அழகிய
சோலைகள் சூழ்ந்த திருப்புகலியில் அடியார்கள் உன்னைப் புகழ்ந்து
வணங்கும் படி வீற்றிருந்தருளினாய்.

     கு-ரை: நிழல் திகழ் மழுவினை-ஒளிவிளங்குகின்ற மழுப்படை
உடையீர்! அழல் திகழ்மேனி-அக்கினியாய் விளங்குகின்ற உடம்பு.
கழல்திகழ், சிலம்பு ஒலி அலம்ப ... அரும் நடம் முயற்றினனே-
வீரகண்டையின் ஒலியும், விளங்குகின்ற சிலம்பின் ஒலியும் (கலந்து)
ஆரவாரிக்க அரிய நடனம் புரிந்தருளிய பெருமானே. முருகு
அமர்பொழில்-வாசனை பொருந்திய சோலை. அடியார் அவர்
ஏத்துற-‘அவர்’ பகுதிப்பொருள் விகுதி. வணங்க உறு துணையாய்
இருந்தவள்.