2832. கையினில் உண்பவர் கணிகைநோன்பர்
  செய்வன தவமலாச் செதுமதியார்
பொய்யவர் உரைகளைப் பொருள்எனாத
மெய்யவர் அடிதொழ விரும்பினனே
     வியந்தாய்வெள் ளேற்றினை விண்ணவர்                                தொழுபுகலி
     உயர்ந்தார்பெருங் கோயிலுள் ஒருங்குடன்                              இருந்தவனே. 10

     10. பொ-ரை: கையில் உணவேற்று உண்ணும் சமணர்களும்,
கணபங்கவாதம் செய்யும் புத்தர்களும் தவமல்லாததைச் செய்யும்
அற்பமதியினர். உண்மைப்பொருளாம் இறைவனை உணராமல்
வெறும் உலகியலறங்களை மட்டுமே பேசுகின்ற அவர்களுடைய
உரைகளைப் பொருளெனக் கொள்ளாது, மெய்ப்பொருளாம்
சிவனையுணர்ந்த ஞானிகள் வந்து திருவடிகளைத் தொழ, விரும்பி
அருள் புரிபவனே! வெண்ணிற எருதினை வாகனமாகக் கொண்டாய்.
விண்ணவர்களும் தொழ, திருப்புகலியில் உயர்ந்த அழகிய
பெருங்கோயிலினுள் உமாதேவியுடன் ஒருங்கு வீற்றிருக்கின்றாய்.

     கு-ரை: கணிகை நோன்பர் - போலியான நோன்பு நோற்பவர்.
செய்வன தவமலாச் செதுமதியர் - செய்வன அனைத்தும் தவம்
அல்லாததாகப் பெற்ற அற்ப மதியையுடையவர்கள்; பொருள்
என்னாத - உண்மையென்று கொள்ளாத; “இறைவன் பொருள்சேர்
புகழ்புரிந்தார்” என்ற திருக்குறளில் பொருள்-உண்மை யென்னும்
பொருளில் வருதல் காண்க.