2848. |
பூசு ரர்தொழு
தேத்திய பூந்தராய் |
|
ஈசன்
சேவடி யேத்தி யிறைஞ்சிடச் |
|
சிந்தை
நோயவை தீர நல்கிடும் |
|
இந்து
வார்சடை யெம்இ றையே. 4 |
4.
பொ-ரை: இப்பூவுலகில் தேவர்கள் போன்று பெருமையாகக் கருதப்படுகின்ற
அந்தணர்கள் வணங்கிப் போற்றும் திருப்பூந்தராய் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள
இறைவனின் செம்மை வாய்ந்த
திருவடிகளைத் துதித்து இறைஞ்சிடச் சந்திரனை அணிந்த நீண்ட
சடைகளையுடைய இறைவன் நம் மனக்கவலைகளைப் போக்கி
அருள்புரிவான். "தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது" (குறள் -7) என்ற வள்ளுவர் வாக்கு
இங்கு நினைவு கூர்தற்குரியது.
கு-ரை:
பூந்தராய் மேவிய ஈசன் மலரடிகளை யேத்தி
வணங்கச் சந்திரனை யணிந்த நெடிய சடையை யுடையவனாகிய
அவ்விறைவன் மனக்கவலைகள் மாற அருள்புரிவன். நோயவை
என்பதில் அவை பகுதிப்பொருள் விகுதி. நல்கிடும் - அருள்புரிவான்.
|