2918. திருவளர் தாமரை மேவினா னும்திகழ்
       பாற்கடற்
கருநிற வண்ணனும் காண்பரி யகட
     வுள்ளிடம்
நரல்சுரி சங்கொடும் இப்பியுந் திந்நல
     மல்கிய
பொருகடல் வெண்டிரை வந்தெறி யும்புன
     வாயிலே.                           9

     9. பொ-ரை: அழகிய தாமரையில் வீற்றிருக்கின்ற பிரமனும்,
விளங்கும் திருப்பாற் கடலில் பள்ளி கொண்டுள்ள கருநிறத்
திருமாலும்
காண்பதற்கரியவன் சிவபெருமான். அவன் விரும்பி
எழுந்தருளியுள்ள இடம் கடலின் வெண்ணிற அலைகள் கரையை
மோதும்போது தள்ளப்பட்ட ஒலிக்கின்ற சுரிசங்குகளும், சிப்பிகளும்
நிறைந்து செல்வம் கொழிக்கும் திருப்புனவாயில் ஆகும்.

     கு-ரை: திருவளர்தாமரை - திணைமயக்கம்.
“உரிப்பொருளல்லன மயங்கவும் பெறுமே” யென்பது சூத்திரம்.
நரல் - ஒலிக்கின்ற. சுரிசங்கு - சுரிந்த முகத்தையுடைய சங்கு.

     பொருகடல் - கரையை மோதும் கடல். காண்பரியான் -
காண்டல் அரியவன். காண்பு - தொழிற்பெயர். கடவுளிடம்
புனவாயில் ‘கடவுள்ளிடம்’, ‘உந்திந் நலம்’ என்பனவும்,
மேலைப்பாடலில் ஆடல் லெழில் என்பதும் இசைநோக்கி விரித்தல்
விகாரப்பட்டன.