2951. நீருடைப் போதுறை வானு மாலுமாய்ச்
  சீருடைக் கழலடி சென்னி காண்கிலர்
பாருடைக் கடவுள்பைஞ் ஞீலி மேவிய
தாருடைக் கொன்றையந் தலைவர் தன்மையே.    9

     9. பொ-ரை: நீர்நிலைகளில் விளங்குகின்ற தாமரை மலரில்
வீற்றிருக்கின்ற பிரமனும், திருமாலும் திருமுடியையும், சிறப்புடைய
கழலணிந்த திருவடிகளையும் தேடியும் காணாது நிற்க, இவ்வுலகை
உடைமைப் பொருளாகக் கொண்ட இறைவன் திருப்பைஞ்ஞீலி
என்னும் திருத்தலத்தில் கொன்றைமாலை அணிந்த தலைவனாய்
வீற்றிருந்தருளுகின்றான்.

     கு-ரை: நீருடைப்போது-தண்ணீரைப் பிறப்பிடமாகவுடைய
தாமரைப்பூ. பிரமனும் மாலுமாய் இருவரும் கூடித்தேடியும் அடி
சென்னி காண்கிலார் என்பது எதிர்நிரல் நிறையாகலின், முறையே
சென்னி, அடிகாண்கிலார் எனக்கூட்டுக. பார் உடைக் கடவுள்
-உலகம்
உடைமைப் பொருளாகத் தான் உடையோனாகிய
(உலகத்துப் பதியாகிய) கடவுள். பார்-பூமி. இங்கே உலகம் என்ற
பொருளில் வந்தது. போதுறைவானும் மாலும் காண்கிலர்.