2956. பாலொடு நெய்தயிர் பலவு மாடுவர்
  தோலொடு நூலிழை துதைந்த மார்பினர்
மேலவர் பரவுவெண் காடு மேவிய
ஆலம தமர்ந்தவெம் மடிக ளல்லரே.         3

     3. பொ-ரை: இறைவர் பாலொடு, நெய், தயிர் மறற்றும்
பலவற்றாலும் திருமுழுக்கு ஆட்டப்படுபவர். யானைத்தோலைப்
போர்வையாகவும், புலித்தோலை ஆடையாகவும் அணிந்தவர்.
முப்புரி நூலணிந்த மார்பினர், சிவஞானிகள் துதிக்கின்ற
திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும்
சிவபெருமான் கல்லால மரத்தின்கீழ் வீற்றிருந்து அறம்
உரைத்த எம் தலைவர் அல்லரோ?

     கு-ரை: தோலொடு நூலிழைதுதைந்த மார்பினர். ஆலம் அது
அமரும்-கல்லாலின் அடியில் அமரும் எம் அடிகள். இனி நஞ்சை
விரும்பியுண்ட எனினும் அமையும். அது-பகுதிப்பொருள் விகுதி.