2988. மெய்யக மிளிரும்வெண் ணூலர் வேதியர்
  மையகண் மலைமக ளோடும் வைகிடம்
வையக மகிழ்தர வைகல் மேற்றிசைச்
செய்யகண் வளவன்முன் செய்த கோயிலே.     2

     2. பொ-ரை: இறைவர் ஒளிர்கின்ற முப்புரிநூல்
அணிந்துள்ளவர். வேதத்தை அருளிச்செய்தவர். அவர், மை தீட்டிய
கரிய கண்ணுடைய மலைமகளான உமாதேவியை உடனாகக்
கொண்டு வீற்றிருந்தருளும் இடமாவது, இப்பூவுலகத்தார் மகிழும்படி
திருவைகல் என்னும் திருத்தலத்தில் மேற்குத் திசையில், சிவந்த
கண்ணுடைய கோச்செங்கட்சோழ மன்னனால் முற்காலத்தில்
எழுப்பப்பட்ட மாடக்கோயிலாகும்.

     கு-ரை: மெய் அகம் - உடம்பினிடத்தில். மிளிரும் -
விளங்குகின்ற - வேதியர்-வேதத்தாற் பிரதிபாதிக்கப்படுபவர். செய்ய
கண் வளவன் -கோச்செங்கண்ணன் என்னும் சோழ அரசர்.
கோச்செங்கட் சோழ நாயனார் வரலாற்றை அவர் மாடக்கோயில்
எழுபது கோடியமையும் தலவரலாற்றில் அறிக. கோச் செங்கட்சோழ
நாயனார் பெருமையைத் திருநாவுக்கரசு நாயனார் ஐந்தாம்
திருமுறையிலும், ஆறாந் திருமுறையிலும் சுந்தரமூர்த்தி நாயனார்
ஏழாந் திருமுறையிலும் அருளினமை காண்க.