2994. மலையன இருபது தோளி னான்வலி
  தொலைவுசெய் தருள்செய்த சோதி யாரிடம்
மலர்மலி பொழிலணி வைகல் வாழ்வர்கள்
வலம்வரு மலையன மாடக் கோயிலே.        8

     8. பொ-ரை: மலை போன்ற இருபது தோள்களையுடைய
இராவணனது வலிமையை அழித்து, பின்னர் அவன் சாம கானம்
பாடிப் போற்ற அவனுக்கு அருள் செய்த சோதியாகிய இறைவன்
வீற்றிருந்தருளும் இடமாவது, மலர்கள் நிறைந்த சோலைகளை
யுடைய அழகிய திருவைகலில் வாழ்கின்றவர்கள் வலம் வந்து
வணங்கும் மலை போன்ற மாடக்கோயில் ஆகும்.

     கு-ரை: அன - அன்ன - போன்ற. வலி தொலைவு செய்து
அருள் செய்த -வலிமையைத் தொலைத்து மீள அவனுக்கே
அருளும் செய்த (சோதியார்) என்பது இரண்டாம் அடியின் பொருள்.

     வலம் வந்து வணங்குகின்ற மலையை ஒத்த மாடக்கோயில்
என்பது நான்காம் அடியின் பொருள்.