3026. காலமும் ஞாயிறுந் தீயும் ஆயவர்
  கோலமும் முடியர வணிந்த கொள்கையர்
சீலமும் உடையவர் திருக்க ருக்குடிச்
சாலவும் இனிதவ ருடைய தன்மையே.          7

     7. பொ-ரை: சிவபெருமான் கால தத்துவமாகவும், அதனைக்
கடந்தும் விளங்குபவர். ஞாயிறு முதலிய சுடராக ஒளிர்பவர்.
நெருப்பு முதலிய பஞ்சபூதங்களானவர். தம் சடைமுடியில்
பாம்பணிந்தவர். சிறந்த புகழை உடையவர். திருக்கருக்குடி என்னும்
திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற அப்பெருமானின் தன்மை
சாலவும் இனிதாகும்.

     கு-ரை: காலம் இடம் முதலிய பொருள்களும் சூரியன் முதலிய
கோள்களும் தீ முதலிய பஞ்சபூதங்களும், ஆயவர் - ஆனவர்.