3039. கார்வணன் நான்முகன் காணு தற்கொணாச்
  சீர்வணச் சேவடி செவ்வி நாள்தொறும்
பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்
கார்வணம் ஆவன அஞ்செ ழுத்துமே.         9

     9. பொ-ரை: திருமாலும், பிரமனும் காணவொண்ணாத
சிறப்புடைய திருவடிகளின் பெருமையை நாள்தோறும் பலமுறை
பேசிப் போற்றும் பக்தர்கட்கு ஆர்வமாக விளங்குவன
திருவைந்தெழுத்தாகும்.

     கு-ரை: பிரம விட்டுணுக்களால் காண முடியாத அடி என்றது.
அத்தகுசீரிய அடியைக் காணுவதுமட்டும் அன்று. அத் திருவடிப்
பேறாகிமேல் இன்பத்தில் திளைத்தலுமாகும். போர்வணம் -
இறைவனுடைய திருப்பெயராகிய தன்மையை (அஞ்செழுத்தை). பேசி
-உச்சரித்து, பிதற்றும் அதனையே எண்ணிப் பன்னிப் பன்னிப்
பலதரமும் சொல்லும் பக்தருக்கு (“பிடித்தொன்றை விடாதுபேசல் பிதற்றுதல் என்று மாமே” என்பது சூடா மணி நிகண்டு.
ஆர்வணம் - ஆர்தல்; திளைத்தல். பித்தர் - இங்குப் பேரன்பினர்
என்னும் பொருளில் வந்தது. “நின்கோயில் வாயிலிற்
பிச்சனாக்கினாய்” திருவாசகம். “அம்பலவர்க்குற்ற பத்தியர்போல ...
ஓர் பித்தி தன்பின்வர முன்வருமோஓர் பெருந்தகையே”
(திருக்கோவையார் - 242) என வருவனவற்றால் அறிக. பிரமன்
முடியையும் திருமால் அடியையும் தேடிக் காணமாட்டாமை ஏனைய
பதிகங்கள் குறிக்க, இப்பதிகம் இருவரும் காணாத சேவடி என்று
மட்டும் குறிக்கிறது. அதன் கருத்து, திருமாலால் காணமுடியாத
அடி பிரமனாலும் காணமுடியாது என்பதாம்.

     அநுபலப்தியால் பெறவைப்பான் “கார்வணன் நான்முகன்
காணுதற்கொணாச் சீர்வணச் சேவடி” யென்று; அடியே காணாதார்
முடிகாண மாட்டாமையும் பெற வைத்தமையறிக.