3049. |
திரிதரு புரம்எரி செய்த சேவகன் |
|
வரியர வொடுமதி சடையில் வைத்தவன்
அரியொடு பிரமனதாற்ற லால் உருத்
தெரியலன் உறைவிடம் திருவிற் கோலமே. 9 |
9.
பொ-ரை: இறைவன் வானத்திலே பறந்து திரிந்து
தேவர்கட்குத் தீங்குகள் செய்த அசுரர்களின் முப்புரங்களை
எரித்தவன். வரிகளையுடைய பாம்பையும், சந்திரனையும் சடையிலே
அணிந்தவன். திருமாலும், பிரமனும் தமது ஆற்றலைப் பெரிதாகக்
கொண்டு முனைந்ததால் காண்பதற்கு அரியவனானவன்.
அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது திருவிற்கோலம் ஆகும்.
கு-ரை:
திரிதரு - வானத்திலே பறந்து திரிந்து கொண்டிருந்த;
புரம். சிவபிரான் காட்டிய எட்டு வீரங்களில் ஒன்றாகையால்
சேவகன் என்றார். ஆற்றலால் உருத்தெரியலன் - அவனைத் தெரிய
வேண்டியவன் அதற்குரிய வழிகள் பல இருக்கவும்
அவற்றிலொன்றையேனும் பற்றாமல் தம் ஆற்றலைக் கருதின
அவர்தம் பேதைமைக்கிரங்கி நம் திருநாவுக்கரசர் பாடியுள்ள
இலிங்கபுராணத் திருக்குறுந்தொகை (5ஆம் திருமுறை) இங்கே
கருதத்தக்கது மரங்களேறி மலர் பறித்திட்டிலர், நிரம்ப நீர்
சுமந்தாட்டி நினைந்திலர் உரம்பொருந்தி ஒளிநிற வண்ணனை
நிரம்பக் காணலுற்றார் அங்கிருவரே என்பது அதில் ஒருபாடல்.
|