3057. மற்றொரு பற்றிலை நெஞ்சமே மறைபல
  கற்றநல் வேதியர் கழுமல வளநகர்ச்
சிற்றிடைப் பேரல்குல் திருந்திழை யவளொடும்
பெற்றெனை யாளுடைப் பெருந்தகை யிருந்ததே.     6

     6. பொ-ரை: நெஞ்சமே! இறைவனைத் தவிர மற்றோர் பற்று
எதுவுமில்லை. நான்கு வேதங்களையும் நன்கு கற்று, கற்றதன்படி
ஒழுகுகின்ற அந்தணர்கள் வாழ்கின்ற திருக்கழுமலம் என்னும்
வளநகரில் சிற்றிடையும், பெரிய அல்குலும் உடைய, அழகிய
ஆபரணங்கள் அணிந்த உமாதேவியோடு, என்னை ஆட்கொண்ட
பெருந்தகையாராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார்.

     கு-ரை: பெற்று எனை ஆளுடைப் பெருந்தகை. "யாவருக்குந்
தந்தைதாய் எனுமிவரிப்படியளித்தார் ஆவதனால் ஆளுடைய
பிள்ளையார் ஆய் அகில தேவருக்கும் முனிவருக்கும் தெரிவரிய
பொருளாகும் தாவில் தனித்திரு ஞானசம்பந்த ராயினார்" என்னும் பெரிய புராணம் நோக்குக.