3058. குறைவளை வதுமொழி குறைவொழி நெஞ்சமே
  நிறைவளை முன்கையாள் நேரிழை யவளொடும்
கறைவளர் பொழிலணி கழுமல வளநகர்ப்
பிறைவளர் சடைமுடிப் பெருந்தகை யிருந்ததே.      7

     7. பொ-ரை: நெஞ்சமே! மனக்குறை கொண்டு மொழியும்
சொற்களை விடுவாயாக. நிறைந்த வளையல்களை முன்கையில்
அணிந்து, சிறந்த ஆபரணங்களை அணிந்த உமாதேவியோடு,
இருண்ட சோலைகளையுடைய அழகிய திருக்கழுமலம் என்னும்
வளநகரில், பிறைச்சந்திரனைச் சடைமுடியில் சூடிப்
பெருந்தகையாராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார்.

     கு-ரை: குறைவளைவது மொழிகுறைவு ஒழி - (பல)
குறைபாடுகள் (நம்மை) வளைந்து கொண்டிருப்பதைப் (பிறரிடம்)
சொல்லித் தவிர்க்க வேண்டுகின்ற குறைவை இனி ஒழிவாயாக
(நெஞ்சமே).