3067. விண்ணுலா வும்நெறி வீடுகாட் டும்நெறி
  மண்ணுலா வும்நெறி மயக்கந்தீர்க் கும்நெறி
தெண்ணிலா வெண்மதி தீண்டுதே வன்குடி
அண்ணலா னேறுடை அடிகள்வே டங்களே.     5

     5. பொ-ரை: ஒளிரும் சந்திர மண்டலத்தைத் தொடும்
திருந்துதேவன்குடியில் இடப வாகனத்தில் வீற்றிருக்கும்
சிவபெருமானின் திருவேடம், இப்பூவுலகில் வாழும் நன்னெறியைக்
காட்டி, தத்துவங்களே தான் என மயங்குவதைத் தீர்க்கும்.
சிவலோகம் செல்லும் நெறிகாட்டும். முக்தி நெறி காட்டும்.

     கு-ரை: விண்-சுவர்க்கலோகம்:-போகபூமி. மதி தீண்டும்-சந்திர
மண்டலத்தை யளாவிய, தேவன்குடி.