3073. சேடர்தே வன்குடித் தேவர்தே வன்றனை
  மாடம்ஓங் கும்பொழின் மல்குதண் காழியான்
நாடவல் லதமிழ் ஞானசம் பந்தன
பாடல்பத் தும்வல்லார்க் கில்லையாம் பாவமே    11

     11. பொ-ரை: தேவர்கள் தொழும் திருந்துதேவன்குடியில்
வீற்றிருந்தருளுகின்ற தேவர்கட்கெல்லாம் தேவனான
சிவபெருமானைப் பற்றி, ஓங்கிய மாடமாளிகைகளும், சோலைகளும்
நிறைந்த, குளிர்ச்சிபொருந்திய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன்
விரும்பும் இன்தமிழில் அருளிய பத்துப் பாடல்களையும்
ஓதவல்லவர்கட்குப் பாவம் இல்லை.

     கு-ரை: சேடர் தேவன்குடி - தேவர் வணங்கும் தேவன்குடி.
திருநீறு அணிதல் உருத்திராக்கம் பூணுதல் சடை தரித்தல் இவை சிவவேடம் எனப்படும். இவ்வேடம் புனைந்தாரைக் குணம் குற்றம்
பாராது வேடத்தையே கருதி வழிபடல்வேண்டும். இவர்கள்
அஞ்சுவது யாதொன்றுமில்லை. இவரைப் பூசிப்போருக்கு எய்தாதன
இல்லை என்பன இப்பதிகத்தால் தெளிவுறுத்தப்படும் பொருள்.
இவற்றில் திருநீறு ஒன்றையே பொருளெனக்கொண்டு
முத்தியடைந்தவர் ஏனாதிநாதநாயனார் 'கடையவன்றன்
நெற்றியின்மேல் வெண்ணீறு தாம் கண்டார்" "கண்ட பொழுதே
கெட்டேன். முன்பு இவர் மேற்காணாத வெண் திருநீற்றின் பொலிவு
கண்டேன். வேறு இனி என்? அண்டர்பிரான் சீர் அடியார்
ஆயினார்" என்று மனம்கொண்டு இவர்தம் கொள்கைக் குறிவழி
நிற்பேனென்று "நேர் நின்றார்". மின் நின்ற செஞ்சடையார் தாமே
வெளி நின்றார்" (தி.12 ஏனாதி நாயனார் புராணம்.40)

     சடைமுடி யொன்றே காரணமாக, எரியிற்புகுந்து உயிர்நீத்து
முத்தியுற்றவர் புகழ்ச்சோழ நாயனார். திருநீறு முதலிய அனைத்தும்
கூடிய வேடத்தைப் பொருளென்றுகொண்டு முத்தி பெற்றவர்
மெய்ப்பொருள் நாயனார்.