3090. |
பாங்கினான் முப்புரம் பாழ்பட வெஞ்சிலை |
|
வாங்கினார் வானவர் தானவர் வணங்கிட
ஓங்கினார் உமையொரு கூறொடும் ஒலிபுனல்
தாங்கினார் உறைவிடஞ் சக்கரப் பள்ளியே. 6 |
6.
பொ-ரை: உரிய தன்மையில் முப்புரங்களும் பாழ்பட்டு
எரிந்து சாம்பலாகும்படி, கோபத்துடன், வளைக்க முடியாத
மேருமலையை வில்லாக வளைத்தவர். தேவர்களும், அசுரர்களும்
வணங்கும் பெருமை பெற்றவர். உமாதேவியைத் தம் உடம்பில் ஒரு
கூறாகக் கொண்டவர். ஒலிக்கின்ற கங்கையைச் சடைமுடியில்
தாங்கியவர். அப்பெருமான் வீற்றிருந்தருளுமிடம் திருச்சக்கரப்பள்ளி
என்பதாகும்.
கு-ரை:
முப்புரம் பாழ்பட. வெம்சிலை - விரும்பத்தக்க(மேரு)
மலையை. பாங்கினால் - இனங்களுக் கேற்க. வாங்கினார் -
வளைந்தவர். வெம்மை விருப்பம். கொடியவில் என்பதில் பொருள்
சிறவாது; தேர் அதற்கு இயைபில்லாதது. அம்பு ஆதற்கு
இயைபில்லாதது, குதிரை ஆதற்கு இயைபு இல்லாதது. (பூமி, திருமால்
வதம்) முறையே தேரும், அம்பும் குதிரையும் ஆனாற்போல,
வில்லாதற்கு இயைபு இல்லாத மலை வில்லாயிற்று.
|