3101. |
பாலனார் ஆருயிர் பாங்கினால் உணவரும் |
|
காலனார்
உயிர்செகக் காலினால் சாடினான்
சேலினார் கண்ணினாள் தன்னொடுஞ் சேர்விடம்
மாலினார் வழிபடும் மாமழ பாடியே.
6 |
6.
பொ-ரை: பாலனான மார்க்கண்டேயனின் வாழ்நாள்
முடிந்ததும் அவன் ஆருயிரைக் கவரவந்த காலனின் உயிர்
அழியும்படி அவனைக் காலால் உதைத்த சிவபெருமான், சேல்மீன்
போன்ற கண்களையுடைய உமாதேவியோடு வீற்றிருந்தருளும்
இடம் திருமால் முதலான பெருமையுடையவர்கள் வழிபடும்
சிறப்புமிக்க திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும்.
கு-ரை:பாலனார்-மார்க்கண்டேயர்.
பாங்கினால்:-அளந்த
வாழ்நாள் முடிந்தவர் உயிரைக்கவரத் தனக்கு இறைவன் அளித்த
ஆளை இங்குப், பாங்கு எனப்பட்டது. செக-அழிய. காலன்
ஆகையினால் அவனைக் காலினாற் சாடினான் என்பது ஓர்
சொல்நயம். சேல்-மீன். மாலினார்-திருமால். இறைவனை வழிபடும்
பேறு உற்றமையின் மாலினார் எனச்சிறப்புக் கிளவியாற் கூறினார்.
|