3122. மறையர்வா யின்மொழி மானொடு வெண்மழுக்
  கறைகொள்சூ லம்முடைக் கையர்கா ரார்தரும்
நறைகொள்கொன் றைநயந் தார்தருஞ் சென்னிமேல்
பிறையர்கோ யில்அர தைப்பெரும் பாழியே.     5

     5. பொ-ரை: சிவபெருமான் வேதங்களை அருளிச்செய்தவர்,
மானும், வெண்மழுவும், சூலமும் ஏந்திய கையர். கார் காலத்தில்
மலரும் தேன் துளிக்கும் நறுமணமுடைய கொன்றை மாலையை
விரும்பி அணிந்துள்ளவர். சடைமுடியில் பிறைச்சந்திரனைச் சூடியவர்.
அப்பெருமான் கோயில் கொண்டருளுவது திரு அரதைப்
பெரும்பாழியே.

     கு-ரை: வாயின்மொழி மறையர் என்க. மான், மழு, சூலம்
உடைய கையர். ஓடு; பிரிந்து, பொருள் தோறும் சென்று
பொருளுணர்த்திற்று. கார் ஆர்தரும் கொன்றை-கார்காலத்தில்
நிறையப் பூக்கும் கொன்றை. நறை-வாசனை; தேன். சென்னிமேல்
தரும் பிறையர் என்க. தரும்-வைத்த.