3129. திரைதரு பவளமும் சீர்திகழ் வயிரமும்
  கரைதரு மகிலொடு கனவளை புகுதரும்
வரைவிலா லெயிலெய்த மயேந்திரப் பள்ளியுள்
அரவரை யழகனை யடியிணை பணிமினே.       1

     1. பொ-ரை: கடலலைகள் அடித்துவரும் பவளங்களும்,
சிறப்புடைய வைரமும், கரையிலே ஒதுக்கப்பட்ட அகில் மரங்களும்,
கனமான சங்குகளும் நிறைந்த திருமயேந்திரப்பள்ளி என்னும்
திருத்தலத்தில், மேருமலையாகிய வில்லால், அக்கினிக் கணையாகிய
அம்பை எய்து முப்புரங்களை எரியும்படி செய்த, இடையில்
பாம்பைக் கச்சாக அணிந்துள்ள அழகனாகிய சிவபெருமானின்
திருவடிகளை வணங்குவீர்களாக.

     கு-ரை: திரைதரு - கடல் அலைகள் அடித்துவந்த, பவளம்.
கரைதரு-கரையில் ஒதுக்கப்பட்ட. (அகில்) வளை - சங்கு. பின்
இரண்டடிக்கு. எயில் எய்த அழகன், மயேந்திரப்பள்ளியுள் அழகன்,
அரவு: அரை அழகன், எனப்பொருள் கொள்க. அரை-இடுப்பு.
ஆகுபெயர்.