3137. நாகணைத் துயில்பவ னலமிகு மலரவன்
  ஆகணைந் தவர்கழ லணையவும் பெறுகிலர்
மாகணைந் தலர்பொழின் மயேந்திரப் பள்ளியுள்
யோகணைந் தவன்கழல் உணர்ந்திருந் துய்ம்மினே.  9

     9. பொ-ரை: ஆதிசேடனாகிய பாம்புப் படுக்கையில்
துயில்பவனான திருமாலும், அழகிய தாமரையில் வீற்றிருக்கும்
பிரமனும் இறைவனின் அடிமுடிகளைத் தேட முற்பட்டு, பன்றி
உருவெடுத்த திருமால் சிவனின் திருவடிகளை நெருங்கவும்
இயலாதவரானார். (அன்ன உருவெடுத்த பிரமன் திருமுடியை
நெருங்க இயலாதவரானார் என்பதும் குறிப்பு.) ஆகாயமளாவிய
பூஞ்சோலைகளையுடைய திருமயேந்திரப் பள்ளியில் யோக
மூர்த்தியாய் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளை
உணர்ந்து தியானித்து நன்மை அடைவீர்களாக!

     கு-ரை: நாகணை, நாக + அணை - ஆதிசேடனாகிய
படுக்கை. அதில் துயில்பவனும், மலரவனும், இருவருமாகத்
தேடத் தொடங்கி, மாகணைந்து - (மாகம் அணைந்து) -
ஆகாயத்தை அளாவி. மாகம் - மாகு எனக் கடைக்குறைந்து
நின்றது. யோகு அணைந்தவன் - யோகம் செய்பவன்.
யோகியாயிருந்து "முத்தியுதவுதலதுவும் ஓரார்" என்பதுங் காண்க.
(சிவஞானசித்தியார் சுபக்கம் சூ-ம். 1-50)