3141. கொடிநெடு மாளிகை கோபுரங் குளிர்மதி
  வடிவுற வமைதர மருவிய வேடகத்
தடிகளை யடிபணிந் தரற்றுமி னன்பினால்
இடிபடும் வினைகள்போ யில்லைய தாகுமே.      2

     2. பொ-ரை: கொடிகளையுடைய நீண்டு உயர்ந்த
மாளிகையின் கோபுரம் குளிர்ந்த சந்திரனைத் தழுவுதலால்
மதிபோல் ஒளிரும் திருவேடகத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமான்
திருவடிகளைக் கீழே விழுந்து வணங்கி இறைவனுடைய புகழைக்
கூறி அன்பினால் வழிபடுங்கள். நம்மைத் துன்புறுத்தும் தீவினைகள்
யாவும் அழிந்துவிடும்.

     கு-ரை: மாளிகை மதிவடிவு உற, கோபுரம் மதி அமைதர
மருவிய ஏடகமென நிரல்நிறையாகக் கொண்டு, மாளிகைகள்
நிறத்தினால் மதியின் வடிவை நிகர்க்கவும், கோபுரம் உயர்வால்
மதியை அளாவவும் பொருந்திய திருவேடகம் எனப் பொருள்
கூறுக. இடிபடும்-இடியை ஒத்த, (வினைகள்).