3145. பொய்கையின் பொழிலுறு புதுமலர்த் தென்றலார்
  வைகையின் வடகரை மருவிய வேடகத்
தையனை யடிபணிந் தரற்றுமின் னடர்தரும்
வெய்யவன் பிணிகெட வீடெளி தாகுமே.       6

     6. பொ-ரை: குளங்களிலும், சோலைகளிலும் அன்றலர்ந்த
புதுமலர்களின் மணத்தைச் சுமந்து தென்றல் காற்று வீச, வைகை
ஆற்றின் வடகரையிலுள்ள திருவேடகத்தில் வீற்றிருக்கும்
தலைவனான சிவபெருமானின் திருவடிகளைப் பணிந்து அவனைப்
போற்றிப் பாடுங்கள். அது இம்மையில் துன்பம்தரும் கொடிய
நோய்களைத் தீர்த்து, மறுமையில் முத்திப்பேற்றினை எளிதாகக்
கிடைக்கச் செய்யும்.

     கு-ரை: குளங்களிலும், சோலைகளிலுமுள்ள புதுமலர்களில்
தென்றல் தவழ்ந்து வருகின்ற வைகை, என்பது முதலடிகளின்
கருத்து. அரற்றுமின் - கதறுங்கள். வெய்யவன் பிணி - கொடிய,
கடிய பிணி; துன்புறுத்தலால் வெய்யபிணி எனவும் எளிதில் நீங்கப்
பெறாமையால், வன்பிணி எனவும் கூறப்பட்டது.