3147. பொன்னுமா மணிகளும் பொருதிரைச் சந்தகில்
  தன்னுளார் வைகையின் கரைதனிற் சமைவுற
அன்னமா மயனுமா லடிமுடி தேடியும்
இன்னவா றெனவொணான் ஏடகத் தொருவனே.  9

     9. பொ-ரை: பொன்னும், மணிவகைகளும், சந்தனம், அகில்
ஆகிய மரங்களும் வீசுகின்ற அலைகள் வாயிலாகக் கொண்டுவந்து
சேர்க்கப்படும் வைகையின் கரையில், அன்னப் பறவையாகப் பிரமன்
திருமுடியையும், பன்றி வடிவாகத் திருமால் திருவடியையும் தேடியும்
இன்னவெனக் காணொணாது விளங்கிய சிவபெருமான்
திருவேடகத்தில் வீற்றிருந்தருளும் ஒப்பற்ற இறைவன் ஆவான்.

     கு-ரை: பொருதிரை - கரையை மோதும் அலைகளாற்
கொணர்ந்த பொன்னும், மணிகளும், சந்தனம் அகில் மரங்களும்
கொண்ட வைகை.