3148. குண்டிகைக் கையினர் குணமிலாத் தேரர்கள்
  பண்டியைப் பெருக்கிடும் பளர்கள் பணிகிலர்
வண்டிரைக் கும்மலர்க் கொன்றையும் வன்னியும்
இண்டைசேர்க் குஞ்சடை யேடகத் தெந்தையே.    10

     10. பொ-ரை: கையில் குண்டிகையேந்திய சமணர்களும்,
இறை உண்மையை உணராத புத்தர்களும், உண்டு வயிற்றைப்
பெருக்கச் செய்யும் பாவிகள். அவர்கள் இறைவனை
வணங்காதவர்கள். அவர்களின் உரைகளைப் பொருளாகக்
கொள்ளவேண்டா. வண்டுகள் மொய்க்கின்ற கொன்றை மலரையும்,
வன்னியையும் மாலையாக அணிந்த சடைமுடியுடைய,
திருவேடகத்தில் வீற்றிருந்தருளும் எம் தந்தையாகிய சிவபெருமானை
ஏத்தி வழிபடுங்கள்.

     கு-ரை: பண்டி - வயிறு. பளகு - பாவம். "பளகு அறுத்து
உடையான் கழல் பணிந்திலை" (தி.8 திருச்சதகம்-35) இண்டை -
தலைக்கு அணியும் மாலை.