3149. கோடுசந் தனமகில் கொண்டிழி வைகைநீர்
  ஏடுசென் றணைதரு மேடகத் தொருவனை
நாடுதென் புகலியுண் ஞானசம் பந்தன
பாடல்பத் திவைவல்லார்க் கில்லையாம் பாவமே.   11

     11. பொ-ரை: யானையின் தந்தம், சந்தனம், அகில்
ஆகியவற்றை அலைகள் வாயிலாகக் கொண்டுவரும் வைகைநீரில்
எதிர் நீந்திச் சென்ற திருவேடு தங்கிய திருவேடகம் என்னும்
திருத்தலத்திலுள்ள ஒப்பற்ற இறைவனை நாடிப்போற்றிய, அழகிய
புகலியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இப்பத்துப்
பாடல்களையும் பக்தியுடன் ஓதவல்லவர்கட்குப் பாவம் இல்லை.
அவர்கள் தீவினைகளிலிருந்து நீங்கப் பெற்றவர்கள் ஆவர்.

     கு-ரை: கோடு - யானைத்தந்தம். ஏடுசென்று அணைதரும்
ஏடகம். இப்பாடல் அகச்சான்று குறிக்கும் பாடல்களில் ஒன்று
(தி.12 திருஞா.புரா.850.)