3188. வீங்கிய வுடலினர் விரிதரு துவருடைப்
  பாங்கிலார் சொலைவிடும் பரனடி பணியுமின்
ஓங்குவண் காளத்தி யுள்ளமோ டுணர்தர
வாங்கிடும் வினைகளை வானவர்க் கொருவனே.  10

     10. பொ-ரை: பருத்த உடலுடைய சமணர்களும், புத்தர்களும்
இறையுண்மையை உணராது கூறும் சொற்களைக் கை விடுக.
இறைவனுடைய திருவடிகளை வணங்கிப் போற்றுங்கள். வளமுடன்
ஓங்கும் வள்ளலாகிய திருக்காளத்திநாதனை உள்ளத்தால் உணர்ந்து
மனம் ஒன்றி வழிபட்டால் தேவர்களுக்கெல்லாம் தலைவனான
அச்சிவபெருமான், வழிபடும் உயிர்களின் வினைகளைத் தீர்த்து
நன்மை செய்வான்.

     கு-ரை: வீங்கிய உடலினர் - சமணர். விடும் - ஒழியுங்கள்.
பன்மையேவல் வினைமுற்று. வாங்கிடும் - நீக்கிடும்.