3191. விண்ணிலார்மதி சூடினான்விரும்
       பும்மறையவன் றன்றலை
உண்ணநன்பலி பேணினானுல
     கத்துளூனுயி ரான்மலைப்
பெண்ணினார்திரு மேனியான்பிர
     மாபுரத்துறை கோயிலுள்
அண்ணலாரரு ளாளனாயமர்
     கின்றவெம்முடை யாதியே.              2

     2. பொ-ரை: இறைவர் விண்ணிலே விளங்கும் சந்திரனைச்
சடையில் சூடியவர். விரும்பும் நான்மறைகளை ஓதுகின்ற பிரமனின்
மண்டையோட்டை உண்கலனாகக் கொண்டு பிச்சை ஏற்றவர்.
உலகத்து உயிர்கட்கு உடம்பும், உயிருமானவர். மலைமகளான
உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவரும்,
திருப்பிரமபுரத்துறைகின்ற கோயிலினுள் அருளைப் பொழிபவராய்
அமர்ந்துள்ள தலைவரும் ஆகிய எம்முடைய சிவபெருமானே
ஆதிப்பிரான் ஆவார்.

     கு-ரை: தலைஉண்ண நன்பலிபேணினான் - உண்ணுவதற்குத்
தலையோட்டிற் பிச்சையேற்றவன். உலகத்துள் உயிரின் - உடம்பும்
உயிரும் ஆனவன் ‘ஊனுயிரானாய் உலகானாய்’ என்பது சுந்தர
மூர்த்திகள் திருவாக்கு. அண்ணல் - தலைமை. சூடினான் -
சூடினவன்.