3195. |
ஊடினாலினி யாவதென்னுயர் |
|
நெஞ்சமேயுறு வல்வினைக்
கோடிநீயுழல் கின்றதென்னழ
லன்றுதன்கையி லேந்தினான்
பீடுநேர்ந்தது கொள்கையான்பிர
மாபுரத்துறை வேதியன்
ஏடுநேர்மதி யோடராவணி
யெந்தையொன்றுநின் றேத்திடே. 6 |
6.
பொ-ரை: உயர் நெஞ்சமே! என் சொல்வழி நில்லாது
பிணங்கினால் அதனால் உனக்கு ஆகப்போவது என்ன?
வல்வினையை ஈட்டுவதற்கென்றே நீ ஓடி உழல்வது தான் என்ன?
பண்டைக்காலத்தில் தன் திருக்கரத்தில் நெருப்பேந்தியவன்
சிவபெருமான். தன்னை வழிபடும் அடியவர்கட்குப் பேரின்பத்தை
வழங்கும் தன்மையன். திருப்பிரமாபுரத்து வீற்றிருந்தருளும்
வேதங்களை அருளிச் செய்தவனும், மலரை ஒத்த பிறைச்
சந்திரனையும், பாம்பையும் அணிந்தவனுமான சிவபெருமானை எம்
தந்தை என்று போற்றி வழிபடுவீர்களாக.
கு-ரை:
வல்வினைக்கு ....... என் (உறுதுணையாய்
அவனிருக்கவும்) எளிதினீங்காத தீவினை நீங்குவதற்கு நீ
ஓடியுழல்வது ஏன்? சேர்ந்தாரைக் கொல்வதாகிய கொடியபொருளும்
அவனையடைந்தால் நற்பொருளாகும். அவன் என
அறிவித்தற்கன்றோ? அக்காலத்தில் அழலை ஏந்தினான்?
மெய்யடியாரோடு பொய்யடியோமையும் ஆட்கொள்பவன்
என்பதறிவித்தற்கு மதியோடு அராவணி எந்தையாயிருந்தான்,
என்றுகொண்டு நீ ஏத்துவாயாக என்பது இப்பாசுரத்தின் கருத்து.
|