3211. மானினேர்விழி மாதராய்வழு
       திக்குமாபெருந் தேவிகேள்
பானல்வாயொரு பாலனீங்கிவ
     னென்றுநீபரி வெய்திடேல்
ஆனைமாமலை யாதியாய
     இடங்களிற்பல அல்லல்சேர்
ஈனர்கட்கெளி யேனலேன்திரு
     வாலவாயர னிற்கவே.               1

     1. பொ-ரை: மான்போன்ற மருண்ட பார்வையுடைய
மாதரசியே! பாண்டிய மன்னனின் மனைவியான பெருந்தேவியே!
கேள். "பால்வடியும் நல்ல வாயையுடைய பாலன்" என்று நீ
இரக்கமடைய வேண்டா. திருஆலவாயரன் துணைநிற்பதால்
ஆனைமலை முதலான இடங்களிலிருந்து வந்துள்ளவர்களும், பல
துன்பங்களைப் பிறர்க்கு விளைவிக்கின்றவர்களுமாகிய இழிந்த
இச்சமணர்கட்கு யான் எளியேன் அல்லேன்.

     கு-ரை: மானின் நேர்விழி - மருண்டு பார்க்குந்தன்மையால்
மாதர்விழிக்கு மானின் விழி உவமை. மாதராய் - மாதராள் என்பதன்
விளி. பானல்வாய் - (பால்+நல்+வாய்) பால்வடியும் நல்ல
வாயையுடைய. ஒரு பாலன் ஈங்கு இவன் என்று நீ. பரிவு - இரக்கம்.
எய்திடல் - அடையாதே. பல அல்லல் சேர் - பல துன்பங்களையும்
பிறர்க்கு விளைவிக்கின்ற. பிற வினைதொக்கது. திருவாலவாய்
அரன்துணை நிற்கையினால் எளியேன் அலேன்.