3226. காட்டுளாடும், பாட்டுளானை
  நாட்டுளாரும், தேட்டுளாரே.        5

     5. பொ-ரை: சுடுகாட்டில் நடனம் ஆடும் இறைவன்
அடியாரேத்தும் பாமாலையை உடையவன். சிவபெருமானே
முழுமுதற்கடவுள் என்று தம் உள்ளத்தில் நிலைநிறுத்தியவர்களே
பேரின்பச் செல்வத்தில் திளைப்பவர்கள்.

     கு-ரை: பாட்டு உள்ளானை - அடியாரேத்தும் பாமாலையை
உடையவன். நாட்டு - அவனே முதற்பொருளென்று நாட்டிய. உள்
- (தம்) உள்ளத்தில். ஆரும் - திளைக்கின்ற. தேட்டு - செல்வம்.
உளாரே - உள்ளவர்களே; செல்வர் எனத் தக்கவர் என்பது அவாய்
நிலையான் வந்தது. "செல்வன் கழலேத்தும் செல்வம் செல்வமே"
என்ற கருத்து. ஆடும் என்ற பெயரெச்சம் உள்ளான் என்ற பெயர்
கொண்டது. ஆர்தல் - திளைத்தல்.