3255. சந்த மார்முலை யாடன கூறனார்
  வெந்த வெண்பொடி யாடிய மெய்யனார்
கந்த மார்பொழில் சூழ்தரு காழியுள்
எந்தை யாரடி யென்மனத் துள்ளவே.           1

     1. பொ-ரை: இறைவர் அழகிய திருமுலைகளையுடைய
உமாதேவியாரைத் தம் திருமேனியில் ஒரு கூறாகக் கொண்டவர்.
வெந்த திருவெண்ணீற்றினைப் பூசிய திருமேனி உடையவர்.
நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த சீகாழியுள் வீற்றிருந்தருளிய
என் தந்தையாராகிய சிவபெருமானின் திருவடிகள் என் மனத்தில்
நன்கு பதிந்துள்ளன.

     கு-ரை: முலையாள் தனகூறனார்; தன - தன்னதாகிய. இது
குறிப்புப் பெயரெச்சம். கந்தம் - நறுமணம். ஈற்றடி, திருக்காளத்தி
முதற் பாட்டின் (தி.3ப.36பா.1.) ஈற்றடியிலும் சிறிது மாறி வருகிறது.