3261. பற்று மானு மழுவு மழகுற
  முற்று மூர்திரிந் துபலி முன்னுவர்
கற்ற மாநன் மறையவர் காழியுட்
பெற்ற மேற துகந்தார் பெருமையே.           7

     7. பொ-ரை: பெருமானார் தம் திருக்கரத்திலே மானையும்,
மழுவையும் அழகுற ஏந்தி, ஊர்முழுவதும் திரிந்து பிச்சை எடுக்க
முற்படுவார். வேதங்களை நன்கு கற்ற பெருமையுடைய நல்ல
அந்தணர்கள் வாழ்கின்ற சீகாழியில் இடபத்தை வாகனமாக விரும்பி
வீற்றிருந்தருளுகின்ற அச்சிவபெருமானது தன்மை இத்தன்மைத்தாகும்.

     கு-ரை: ஊர் முற்றும் திரிந்து பலி ஏற்பதற்கு முற்படுவர்
என்பது இரண்டாம் அடியின் பொருள். மூன்றாம் அடியில் கற்ற
மா நல்(ல) மறையவர் எனக்கொள்க. கற்ற என்பதனால் நூலறிவாகிய
அபரஞானமும் நல் என்றதனாற் பரஞானமும் குறித்தபடி. பெற்றம்
ஏறு - பசுவின் ஆண். சிங்க ஏறு என்றாற் போல. பெருமையே -
பெருமை இத்தகையது ஆகும் என்பது.