3291. பொடிமெய் பூசிமலர் கொய்து புணர்ந்துடன்
  செடிய ரல்லாவுள்ளம் நல்கிய செல்வத்தர்
கடிகொள் முல்லைகம ழுங்கரு காவூரெம்
அடிகள் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.     4

     4. பொ-ரை: திருவெண்ணீற்றைத் திருமேனியில் பூசி, மலர்
கொண்டு தூவிப் போற்றி வழிபடும் அடியவர்கட்குக் குற்றமில்லாச்
செம்மையான உள்ளம் நல்கும் செல்வரான சிவபெருமான், நறுமணம்
கமழும் முல்லைகளையுடைய திருக்கருகாவூரில் வீற்றிருந்தருளும்
எம் அடிகளாவார். அவருடைய வண்ணம் நெருப்புப்போன்ற சிவந்த
வண்ணமாகும்.

     கு-ரை: உள்ளம் நல்கிய செல்வந்தர் - திருநீற்றுப் பூச்சும்
மலர் பறித்து வழிபடும் பூசையும் புரிதற்குத்தக்க உள்ளம் அருளிய
திருவருட் செல்வம் உடையவர்.