3295. பண்ணி னேர்மொழி யாளையோர் பாகனார்
  மண்ணு கோலம்முடை யம்மல ரானொடும்
கண்ண னேடவரி யார்கரு காவூரெம்
அண்ணல் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.    9

    9. பொ-ரை: பண்போன்று இனிய மொழிபேசும் உமா
தேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்ட இறைவன்,
அலங்கரிக்கப்பட்ட கோலமுடைய அழகிய மலரில் வீற்றிருந்தருளும்
பிரமனும், திருமாலும் காண்பதற்கு அரியவராய்த் திருக்கருகாவூரில்
வீற்றிருந்தருளும் எம் தலைவர் ஆவார். அவனது வண்ணம்
நெருப்புப் போன்ற சிவந்த வண்ணமாகும்.

     கு-ரை: மண்ணு - அலங்கரிக்கப்பட்ட, கோலம். கண்ணன்
- திருமால்; கரிய நிறமுடையவன். கண்ணனாக அவதரித்தவன்
எனலும் ஒன்று. நேட - தேட.