3298. |
காட்டு மாவ துரித்துரி போர்த்துடல் |
|
நாட்ட
மூன்றுடை யாயுரை செய்வனான்
வேட்டு வேள்விசெய் யாஅமண் கையரை
ஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே. 1 |
1.
பொ-ரை: காட்டிலுள்ள யானையின் தோலை உரித்துப்
போர்த்திய இறைவனே! மூன்று கண்ணுடைய பெருமானே!
நல்வேள்வியைப் புரியாதவர்களாகிய சமணர்களுடன் நான் வாதம்
செய்து அவரை விரட்டுவதற்குத் திருவுளக்குறிப்பு யாது? உரை
செய்வாயாக!
கு-ரை:
காட்டுமா - காட்டிலுள்ள யானை. உரி - உரிவை;
தோல். உடல் போர்த்து - உடலிற் போர்த்து. நாட்டம் - கண்,
நாட்டம் மூன்றுடையாய் என்றது; ஏனையர்போல இருகண் அன்றி,
மேலும் ஒரு கண் (நெற்றிக்கண்) தீயோரை அழித்தற்கெனக்
கொண்டருளினாய். இது பொழுதும் அச்செயல் செயவேண்டும் என்ற
குறிப்பு. வன்றொண்டப் பெருந்தகையும் வேறு திருவுளம்பற்றியருளற்
குறிப்போடு மூன்று கண்ணுடையாய் அடியேன் கண் கொள்வதே
என்றமையும் காண்க. உரை செய்வன் - நான் விண்ணப்பம் செய்து
கொள்வேன். அது திருக்கடைக் காப்பில் கேட்ட
ஞானசம்பந்தன்என்றமையாலும் அறியப்படுகிறது. ஓட்டி வாதுசெய
- வாதுசெய்து ஓட்ட என விகுதி மாற்றிக் கூட்டுக.
|