3300. மண்ண கத்திலும் வானிலு மெங்குமாம்
  திண்ண கத்திரு வாலவா யாயருள்
பெண்ண கத்தெழிற் சாக்கியப் பேயமண்
தெண்ணர் கற்பழிக் கத்திரு வுள்ளமே.       3

     3. பொ-ரை: இப் பூவிலகத்திலும், விண்ணுலகத்திலும் மற்றும்
எல்லா இடங்களிலும் உறுதியாய் விளங்கும் ஆலவாயில்
வீற்றிருக்கின்ற இறைவனே! பௌத்தர்களும் சமணர்களும் வாதம்
புரியும் தன்மையில் அவர்தம் கல்வியைத் தகுதியற்றதாக அழிதல்
செய்வதற்குத் திருவுள்ளம் யாது! உரைத்தருள்வாயாக.

     கு-ரை: எங்கும் ஆம் - எங்குமாய் நிறைந்து,
திருவாலவாயினில் வெளிப்பட்டருளிய பெருமானே என்பது
முதலிரண்டடியின் கருத்து. அருள் -சொல்லியருள்வீராக. எழில்
இகழ்ச்சி குறிப்பு. திண்ணகத் திருவாலவாய் -பகைவரால்
அழிக்கமுடியாத வலிய அரண்களையுடைய திருவாலவாய்.
தெண்ணர் - திண்ணர் என்பதன் மரூஉ. குண்டர் முதலிய
பிற பெயர்களைப்போல்வது இது, சாக்கியப் பேய் அமண் - சாக்கியரோடு கூடிய பேய்போன்ற சமணர். கற்பு -
கல்விநிலை; அல்லது கல்போன்ற உறுதிப்பாடு. பெண்ணகத்துக்குச்
சாக்கியர் கற்பு என்ற சொல் அமைப்பை நோக்குக. நாங்கள்
பகைகளை ஒழிக்க எண்ணுவதுபோல அவர்களும் எண்ணலாமோ
எனின், தானவிசேடத்தால் சைவத்துக்கு வாழ்வும் புறச் சமயத்துக்கு
வீழ்வும் அளிக்கவல்ல தலம் என்பார்; “திண்ணகத் திருவாலவாய்”
என்றார். இடவிசேடம் இத்துணைத்து என்பதை “முறஞ்செவி
வாரணம் முன்சமம் முருக்கிய, புறஞ்சிறை வாரணம் புக்கனர்
புரிந்து” எனவரும் சிலப்பதிகாராத்தால் அறிக.