3306. மாலும் நான்முக னும்மறி யாநெறி
  ஆல வாயுறை யும்மண்ண லேபணி
மேலை வீடுண ராவெற்ற ரையரைச்
சால வாதுசெ யத்திரு யுள்ளமே.           9

     9. பொ-ரை: திருமாலும், பிரமனும் அறியாத தன்மையராய்த்
திருஆலவாயில் வீற்றிருந்தருளும் தலைவரான சிவபெருமானே!
இறைவனுக்குத் தொண்டு செய்து உயர்ந்த வீட்டுநெறியினை
அடைவதற்குரிய வழியை உணராது ஆடையின்றித் திரியும்
சமணர்களோடு மிகவும் வாது செய்யத் தங்கள் திருவுள்ளம் யாது?

     கு-ரை: சால - முற்றிலும். வாது செயத் திருவுள்ளமே
பணிப்பீராயின் என்பது கருத்து.